இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் டிராவிட்க்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
தற்போது பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பாளராக உள்ளார். இந்தியாவுக்கான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி, எதிர்கால இந்திய அணியை வலுப்படுத்தும் பொறுப்பு இந்த அகாடமிக்கு உண்டு. அந்தப் பதவிக்கு ராகுல் டிராவிட் வந்தபின் ஏராளமான துடிப்புமிக்க இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. ரவி சாஸ்திரியின் பதவி காலத்தை நீடிக்க பிசிசிஐ விரும்பவில்லை. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வயது வரம்பு 60ஆக இருக்கும் நிலையில், தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் ராகுல் டிராவிட்க்கே அதிக கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது,
அதேநேரத்தில், தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில், அந்தப் பதவிக்கு விவிஎஸ் லஷ்மன் வருவார் என்று கூறப்படுகிறது.
newstm.in

