எஸ்ஐ வில்சனைக் கொன்றது ஏன்? தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்!!
"எங்கள் அமைப்பினரை துன்புறுத்தியதால் சுட்டுக்கொன்றோம்" - எஸ்ஐ கொலை தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

எங்களது அமைப்பை தொடர்ந்து சோதனை, விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்ததால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்ட எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்றோம்'' என்று 2 தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சியும் பெற்றுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட 'அல் உம்மா' அமைப்பை சேர்ந்த காஜா மைதீன், மெகபூப் பாஷா தலைமையில் 'அல் ஹண்ட்' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி தீவிரவாத செயல்கள் நடத்தி வந்தது கர்நாடக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மெகபூப் பாஷா தலைமையிலான குழுவில் 18 பேர் உள்ளனர். இவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சி பெற்றவர்கள் என்பதும், கர்நாடகா, டெல்லியில் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து இருக்கிறது. 'அல் ஹண்ட்' அமைப்பில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர். இவர்களுக்கு மும்பையில் துப்பாக்கி கிடைத்தது தெரியவந்த நிலையில் அதனை எளிதாக கன்னியாகுமரி எடுத்து வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இவர்களுக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் 18 பேரை கியூ பிரிவு போலீசார் 14ம் தேதி இரவு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் களியக்காவிளை, திருவிதாங்கோடு, தக்கலை, கோட்டார் அருகே இளங்கடை உள்ளிட்ட இடங்களுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் இருவர் ராமநாதபுரம், ஒருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் முழுமையான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனிடையே, கைதான அப்துல்சமீம், தவுபீக் ஆகியோரிடம் தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, அவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தனர். அதில், ''களியக்காவிளை சப்இன்ஸ்பெக்டர் வில்சனை நாங்கள்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம். நாங்கள் நடத்திய தாக்குதல் என்பது ஆட்சி அதிகாரத்திற்கும், போலீசாருக்கும் எதிரான எங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எங்களது அமைப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து சோதனை, விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்தனர். அதனால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்டவும், எங்களது அமைப்பின் சக்தியை வெளிப்படுத்தவும் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம்'' என்று தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 20ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ஜெயசங்கர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து இருவரையும் ஜெயிலில் அடைக்க பாளையங்கோட்டை சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதுகுறித்துகுமரி மாவட்ட எஸ்.பி நாத் நிருபர்களிடம் பேசியப்போது, எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கிடைக்கவில்லை,முழுமையான விசாரணைக்கு பின்னர் வழக்கு தொடர்பான நிறைய விஷயங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
newstm.in



