இரத்த தானம் ஏன் செய்யவேண்டும்? ரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள் !!
இரத்த தானம் ஏன் செய்யவேண்டும்? ரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள் !!

ரத்த தானம் செய்யும் போது அதற்கான தகுதிகள் உங்களிடம் உள்ளதா? என நீங்களும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது..
மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வேண்டுமென்றால் ரத்தம் அவசியம். நமது உடலில் அனைத்து பகுதிகளிலும் சீராக பரவியுள்ளது. உடலில் அனைத்து உறுப்புகளும் இயங்கத் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில் ரத்தம் முக்கிய பங்காற்றுகிறது.
ரத்த தானம் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன? பார்க்கலாம்...
► ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், நமது உடலில் உள்ள ரத்தத்தின் பிரிவு, உடல் ரத்த அழுத்தத்தின் அளவு, வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும். ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 13.5 க்கு குறையாமலும், பெண்களுக்கு 12க்கு குறையாமலும் இருக்க வேண்டும். அதேபோன்று ரத்த அழுத்தத்தின் அளவு சராசரியாக 120/80mmHg என்ற அளவில் இருக்க வேண்டும்.
► ரத்த தானத்துக்குப் பின்னர், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்றவை உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் மாறும். இருந்தாலும் முன்னதாக உங்களுக்கு எந்த தொற்றும் இல்லை என உறுதி செய்த பிறகு ரத்த தானம் செய்வது நல்லது.
► உடல் எடை 45 கிலோவுக்கு கீழ் உள்ளவர்கள், 18 வயதுக்கு கீழ் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
► ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது.
► மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
► மது அருந்தியவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.
► ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளிட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் ரத்த தானம் செய்யக் கூடாது.
► எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.
ரத்தம் கொடுக்கும் முன்னரும், பின்னரும் செய்ய வேண்டியவை:
► கொடுப்பதற்கு முன்னர் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து அளிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். சீரான தூக்கமும் அவசியம். மனஅமைதியுடன் இருக்க வேண்டும்.
► ரத்தம் கொடுக்கும்போது, இறுக்கமாக அல்லாமல் தளர்வான உடைகளை அணியலாம்.
► ரத்தம் கொடுத்த பின்னரும் பழச்சாறு, ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
► ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு மது அருந்தக் கூடாது. திரவ உணவை எடுத்துக்கொள்ளலாம்.
► ரத்தம் கொடுத்த பின்னர், சிறிது நேரத்திற்கு எடை அதிகம் உள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாது.
► வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
ரத்த தானம் செய்வதனால் உண்டாகும் நன்மைகள்:
► ரத்த தானம் செய்வதால் மற்றவர் பலன் பெறுவது மட்டுமில்லாமல் நமது உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
► ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.
► மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.
► உடலில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.
► ரத்தம் கொடுக்க தகுதி உள்ளோர் மூன்று மதத்திற்கு ஒருமுறை ரத்தம் கொடுக்கலாம்.