மனைவி மரணம்.. சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளில் கணவர் உயிரிழப்பு.. தவிக்கும் குழந்தை
மனைவி மரணம்.. சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளில் கணவர் உயிரிழப்பு.. தவிக்கும் குழந்தை

மனைவி தற்கொலை வழக்கில் சிறையில் இருந்த கணவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த நந்தினி வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே, நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு ராஜாமணியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறை மருத்துவரின் முதலுதவிக்கு பின் ராஜாமணியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ராஜாமணிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்திருக்கிறது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் சிறையில் இருந்தபோது அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்- தந்தை உயிரிழந்த நிலையில் அவர்களின் ஆண் குழந்தை தனியாக பரிதவித்து வருகிறது.
newstm.in

