செப்டம்பர் 17-ல் வெளியாகிறதா மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’?
செப்டம்பர் 17-ல் வெளியாகிறதா மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ‘லொள்ளு சபா’. இதனை இயக்கியவர் ராம்பாலா. 2016-ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.
அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் சந்தானம் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை இயக்கினார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா உருவாகியுள்ள படம் ‘இடியட்’. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி, சிங்கமுத்து, ரவி மரியா, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தபோது, ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் நேரடி ஓடிடி வெளியீட்டு முடிவை மாற்றியுள்ளது படக்குழு.
இம்மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 7ஜி சிவா கைப்பற்றியுள்ளார். செப்டம்பர் 17-ம் தேதி வெளியிடப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

