காங்கிரஸ் பேரணிக்கான விளம்பர போஸ்டரில் இடம்பெற்ற பெண் பாஜகவில் இணைகிறார்..!!
காங்கிரஸ் பேரணிக்கான விளம்பர போஸ்டரில் இடம்பெற்ற பெண் பாஜகவில் இணைகிறார்..!!

‘நான் பெண்... நான் போராடுவேன்’ முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் இந்த பேரணியை நடத்தி வருகிறது. பிரியங்கா காந்தி தலைமையில் இந்த மாரத்தான் நடைபெறுகிறது.
குறிப்பாக, உத்தர பிரதேச தேர்தலில் பிரசாரத்தின் ஒருபகுதியாக இந்த பேரணியை காங்கிரஸ் நடத்தி வருகிறது. பெண்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மாரத்தான் பேரணி ஏற்கனவே பல இடங்களில் நடைபெற்றுள்ளது.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாரத்தான் பேரணியை காங்கிரஸ் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் ‘நான் பெண்... நான் போராடுவேன்’ பேரணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதில், காங்கிரஸ் சார்பில் வெளியிட்டப்பட்ட அட்டைப்பட விளம்பரத்தில் உத்தரபிரதேச மகிளா காங்கிரஸ் துணைப்பொதுச்செயலாளர் பிரியங்கா மவுரியாவின் புகைப்படம் இடம்பெற்றது.
இதையடுத்து, பிரியங்கா மவுரியா உத்தரபிரதேச அரசியலில் பேசுபொருளாக மாறி வந்தார். அவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பிரியங்கா மவுரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் பெண்... நான் போராடுவேன்’ என்பதே முழக்கம் ஆனால், போராட எனக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கவில்லை என்றார்.
மேலும், பாஜகவில் இணைய உள்ளீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு, கிட்டத்தட்ட ஆம்... நான் காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டேன். ஆனால், எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். போட்டியிடுவோர் பட்டியல் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
உத்தரபிரதேச காரங்கிஸ் பேரணியின் முகமாக இருந்த பிரியங்கா மவுரியா பாஜகவில் இணைய உள்ள நிகழ்வு தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.