உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ! மகுடம் சூட்டுவது விராட் படையா? கேன் சேனையா? இன்று பலப்பரீட்சை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ! மகுடம் சூட்டுவது விராட் படையா? கேன் சேனையா? இன்று பலப்பரீட்சை!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா மயிரிழையில் இறுதிசுற்று வாய்ப்பை நழுவ விட்டது.
இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் அதிகமாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் கேப்டன் விராட்கோலி, புஜாரா ஆகியோரைத் தான் அணி அதிகமாக நம்பி இருக்கிறது.
பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டது.

விராட் கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி. பட்டத்தையும் கைபற்றவில்லை. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. காயத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. நியூசிலாந்தின் பந்து வீச்சு அசுர பலம் வாய்ந்ததாக விளங்குகிறது.
இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நேரம் இழப்பீடு இன்றி 5 நாட்களும் போட்டி முழுமையாக நடந்து டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் சவுத்தம்டனில் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¼ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
newstm.in

