Theme Check

தமிழகத்தில் XE வகை கொரோனா.. சுகாதாரத்துறை செயலர் விளக்கம்..!

தமிழகத்தில் XE வகை கொரோனா.. சுகாதாரத்துறை செயலர் விளக்கம்..!

தமிழகத்தில் XE வகை கொரோனா.. சுகாதாரத்துறை செயலர் விளக்கம்..!
X

ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கல்லூரி மாணவ - மாணவிகள் சுகாதாரம் குறித்த மணல் சிற்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

“கொரோனா உறுதியான மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்ததில் இதுவரை ஒமைக்ரான் XE வகை கொரோனா தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொதுமக்கள் வீணாக பதற்றம் அடைய வேண்டாம். உருமாறுவது வைரஸின் இயல்பு.

மேலும், முகக்கவசம் அணிவது குறித்து மக்களிடையே தவறான புரிதல் உள்ளது. பொது இடத்தில் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகம் முழுவதும் இதுவரை 110 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதத்திற்கு பயந்து முகக் கவசம் அணிவதற்கு பதில், மக்கள் விழிப்புணர்வு புரிதலோடு அணிய வேண்டும். புதிய வகை கொரோனா எச்சரிக்கை உள்ளதால் பாதுகாப்பு விதிகளில் அலட்சியம் வேண்டாம். பொது இடங்களில் அனைத்து விதிகளையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 3.2 லட்சத்திலிருந்து 3.8 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு ஏற்ப தான், தினசரி கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தேவைப்பட்டால், தினசரி சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என எண்ணக்கூடாது. இன்னமும் 20 - 30 பாதிப்புகள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

Next Story
Share it