சொத்துக்காக சொந்த தம்பியை அடித்தே கொலைசெய்த பாசமிகு அக்கா !!
சொத்துக்காக சொந்த தம்பியை அடித்தே கொலைசெய்த பாசமிகு அக்கா !!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41). திருமணமாகாத இவர் சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மனநலம் குன்றி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் அருகில் வசித்து வரும் இவரது மூத்த சகோதரியான தனலட்சுமிக்கும் இடையே குடும்ப சொத்து தகராறு உள்ளது. அதாவது, சுமார் 4 சென்ட் இடத்தை யார் எடுத்துக்கொள்வது என அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது.
அண்மையில் தனது சகோதரியின் கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக, பூபாலன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் பலத்த காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து, கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், சகோதரி தனலட்சுமி குடும்பத்தினர், பூபாலனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தாக்குதல் நடத்தியதோடு, படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியுள்ளனர்.
மேலும் குடிநீர், உணவு ஏதும் கொடுக்காமலும் தவிக்க விட்டதால், காயமடைந்து பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து பூபாலனை அடித்துக் கொன்ற மூத்த சகோதரி தனலட்சுமி, அவரது கணவர் ரவி ஆகிய இருவரையும் சோழவரம் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்காக சொந்த சகோதரனையே குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

