காவல்நிலையம் அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் மீது பெற்றோர் பரபரப்பு புகார் !!
காவல்நிலையம் அருகே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் மீது பெற்றோர் பரபரப்பு புகார் !!

காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரை பீ.பி.குளம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் ஈஸ்வரன் (30). முழு ஊரடங்கு நாள் மற்றும் விடுமுறை தினங்களில் மது விற்பனை செய்த புகாரில் இவரிடம் தல்லாகுளம் காவல்நிலைய போலீசார் 4 பேர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஈஸ்வரனின் வீட்டிற்குள் புகுந்து மதுப்பாட்டில்கள் உள்ளதா என சோதனையிட்டதோடு, ஈஸ்வரனை நடுரோட்டில் வைத்து காவலர்கள் தாக்கியதாக புகார் கூறப்படுகிறது.
இதனால் ஈஸ்வரன் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக ஈஸ்வரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் 70 சதவித தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தீக்காயங்களுடன் வீடியோவொன்றையும் வெளியிட்டார் ஈஸ்வரன். அதில், தன்னை காவல்துறையினர் அடிக்கடி அடித்ததோடு பணம் கேட்டாதாகவும் பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரனின் இந்த முடிவுக்கு போலீசார் தான் காரணம் எனவும், காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், தீக்குளித்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே மது விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளது. விசாரணை நடத்தப்பட்ட நாளன்று ஈஸ்வரன் மற்றும் சிலர் மது விற்றதாக தகவல் வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தினர். காவல்நிலையத்திற்குகூட ஈஸ்வரனை அழைத்து வரவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

