யுவனின் இசை தாலாட்டு.. வலிமை படத்தின் 2ஆவது பாடல் ப்ரோமோவுக்கு வரவேற்பு.. ஏ.கே. ரசிகர்கள் குஷி !!

வலிமை திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் ஏ.கே நடிக்கும் இரண்டாவது திரைப்படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'வலிமை' பொங்கலையொட்டி வெளியாகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இப்படத்தின், முதல் பாடலான 'நாங்க வேற மாரி' பாடல் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளையும் 1 மில்லியன் லைக்ஸ்களையும் 'நாங்க வேற மாரி' கடந்துள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. தற்போது இரண்டாம் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலையும் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ' என்று சித் ஸ்ரீராம் குரலோடு யுவன் இசையும் கேட்பவர்களைத் தாலாட்டுகிறது. அத்தோடு ஏ.கே குரலும் முதலில் ஒலிக்கிறது.

இந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அஜித் உடன் அவருக்கு தயாக நடிக்கும் நடிகை சுமித்ராவின் படமும் சேர்த்தார் போல ஒரு போஸ்டர் தயார் செய்திருந்தார்கள். தாய்மையை போன்றும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.
முன்னதாக என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியானது. அதில், பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. ’தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்கவேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

