அட கொடுமையே.. செல்போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்
அட கொடுமையே.. செல்போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்

கல்லூரி ஒன்றில் செல்போன் வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இதில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவ தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு கனமழை பெய்துக்கொண்டிருந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் மின்வினியோகம் தடைப்பட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மாணவர்கள் திகைத்து போனார்கள். இதன்பின் செல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுத மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
தேர்வு அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல கூடாது என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டு 2 மணிநேரம் ஒரு கையில் போனை பிடித்து கொண்டு மறுபுறம் தேர்வெழுதி உள்ளனர். அது ஒரு சுயாட்சி கல்லூரி என்ற வகையில், அதிகாரிகள் தேர்வை ரத்து செய்திருக்கலாம். மாணவர்களை மறுதேர்வை எழுதும்படி கூறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றி கல்லூரி முதல்வர் அனில் கூறும்போது, தேர்வு சூப்பிரெண்டிடம் இருந்து விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம். அதனை தேர்வு நிலை குழு நாளை (புதன்கிழமை) ஆய்வு மேற்கொள்ளும் என கூறியுள்ளார். இறுதி முடிவு, ஆட்சி குழு கூட்டத்தில் பேசி எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கல்லூரிக்காக ரூ.54 லட்சம், உயர்அழுத்த மின்சார லைன் பெற செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறொன்று நடந்துள்ளது. ஜெனரேட்டர் போன்ற மாற்று வசதிகளை முன்பே ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என கூறினார். ரூ.77 லட்சம் செலவில் வாங்கிய ஜெனரேட்டர் பயன்பாடு என்னவாயிற்று என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது.
newstm.in

