இளசை சுந்தரம் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!
இளசை சுந்தரம் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், எழுத்தாளருமான இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இளசை சுந்தரம் ஒரு சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர் ஆவார். இவர் 1970 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1976-ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியாற்றினார். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.

வானொலியில் தங்கக் கப்பல் என்ற குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதி, தயாரித்து வழங்கினார்.இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை விடுதலையின் கதை எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதை போல தொகுத்து வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றது. திருச்சி வானொலியின் இலக்கிய பகுதியின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தினார்.
பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது பாரதிதாசன் பரம்பரை என்ற வகையில் பல கவிஞர்களைச் சந்தித்து வானொலியில் ஒலிபரப்பினார். அத்துடன், பாண்டியன் பரிசு நாடகத்தை வானொலிக்காக உருவாக்கினார். இது சிங்கப்பூர் வானொலியிலும் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டது. இவர் பல தமிழ் வார, மாத இதழ்களில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 175 இலக்கியக் கட்டுரைகள் 150 கவிதைகள் மற்றும் 50 நாடகங்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய உடல், மதுரையில் உள்ள ஆண்டாள்புரம் அக்ரிணி நிர்மல் B ப்ளாக் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளசை சுந்தரம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

