மாணவி ஸ்ரீமதி மரணம்.. பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கேட்டு மனு..!

மாணவி ஸ்ரீமதி மரணம்.. பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கேட்டு மனு..!;

Update: 2022-07-28 13:47 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார்.

மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் படி சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, விழுப்புரம் கோர்ட்டில் இருந்து ரவிக்குமார் உட்பட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்களை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கூட்டி வந்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Similar News