அடுத்த காவு வாங்கியது ஆன்லைன் ரம்மி.. 2 குழந்தைகளின் தந்தை.

அடுத்த காவு வாங்கியது ஆன்லைன் ரம்மி.. 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..!;

Update: 2022-07-28 15:23 GMT

ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழந்த விரக்தியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர், தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், நாளடைவில் அதற்கு அடிமையாகியுள்ளார். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனால் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. முதலில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த பிரபு, விட்டதை பிடிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்துள்ளார்.

இதனால் அவர் ரூ.15 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடனுக்கு ஆளான அவர், தான் வசித்து வரும் வீட்டை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து வீட்டை வைத்து அவர் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வாங்கிய நிலையில் அதனையும் ஆன்லைன் ரம்மியில் இழந்தார்.

இதனால் செய்வறியது மனம் உடைந்துபோனார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈசியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையால், ஆன்லைன் ரம்மியில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த 15-ம் தேதி, ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த கோவை போலீஸ்காரர் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News