உத்தரபிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் சொன்னார்.




இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்தார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ - மாணவியரும் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறுகையில், “இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் காண நேர்ந்தது.

முதல் பார்வையில், ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். அவரது இடைநீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘இந்த ஆசிரியை ஊர்மிளா சிங் பற்றி நல்ல அபிப்பிராயங்கள் இல்லை. ஏற்கனவே இதுபோலத்தான் அவர் குறித்து எங்கள் பிள்ளைகள் புகார் கூறுவார்கள். ஆனால், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வீடியோ வைரலான பிறகுதான் அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.