ஆன்லைன் வகுப்பின் போது ஹெட்செட் வெடித்து இளைஞர் பலி..!
ஆன்லைன் வகுப்பின் போது ஹெட்செட் வெடித்து இளைஞர் பலி..!
ஆன்லைன் வகுப்பின்போது ஹெட்செட் பயன்படுத்தி பாடம் படித்துக் கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 28 வயது இளைஞர், திடீரென ஹெட்செட் வெடித்ததில் பலியாகியுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறையினர், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது; “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் நாகர் (28). இவர் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார்.
அப்போது, மின் சாதனத்தில் ஹெட்போனை பொருத்தி பயன்படுத்தியுள்ளார். திடீரென ஹெட்போன் வெடித்ததில் இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராகேஷ் குமார் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்” என்றனர்.
இதுகுறித்து டாக்டர் ருண்ட்லா கூறுகையில், “ராகேஷ் குமாரை மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவர் சுயநினைவை இழந்திருந்தார். அத்துடன் அவருடைய இரண்டு காதுகளும் பலத்த காயம் அடைந்திருந்தன. அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம்” என்றார்.