தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கொள்ளை.. திமுக நிர்வாகி கைது..!
தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கொள்ளை.. திமுக நிர்வாகி கைது..!
திருப்பூரைச் சேர்ந்தவர் குமார் (46). தொழிலதிபரான இவருக்கு, சென்னை திரு.வி.க. நகர் பகுதி திமுக பிரதிநிதியான நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த சங்கர் (44) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, குமாரிடம் இருந்த கணக்கில் காட்டாத 5 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக சங்கர் கூறியுள்ளார். முதற்கட்டமாக 1 கோடி ரூபாயுடன் இரண்டு நாட்களுக்கு முன் குமார் சென்னை வந்துள்ளார்.
அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை மாற்றுவதற்காக, அண்ணா நகர் 3வது பிரதான சாலை மற்றும் நியூ ஆவடி சாலை சந்திப்பில் சங்கரும், குமாரும் நேற்று காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், குமார் பணம் வைத்திருந்த பையை பறிக்க முயற்சித்தனர். குமார் கூச்சலிட்டதால் கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து சங்கரும் தப்பி ஓடினார். அங்கிருந்த மக்கள் சங்கரை விரட்டிப் பிடித்து, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சங்கரிடம் போலீசார் விசாரித்தபோது, சங்கரும் அவரது கூட்டாளி விஜய்குமாரும் சேர்ந்து குமாரிடம் இருந்த 1 கோடி ரூபாயை அபகரிக்க திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திமுக பிரமுகரான சங்கர் கைது செய்யப்பட்டார்.