மாணவர்களுக்கு 10 உபகரணங்கள் இலவசம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

மாணவர்களுக்கு 10 உபகரணங்கள் இலவசம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Update: 2022-06-23 10:21 GMT

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.

வருகின்ற 2025-ம் ஆண்டில் கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாடப் புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Similar News