குஜராத்துக்கு 1,000 முதலைகள்.. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!
குஜராத்துக்கு 1,000 முதலைகள்.. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!
சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக உள்ள ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய - மாநில அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளது.
250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வனவிலங்கு பூங்கா அமைக்க 2019-ம் ஆண்டு விண்ணப்பித்து, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் வரைக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப் போவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக அரசின் வனவிலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலைப் பண்ணை உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.