1,00,00,000 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியம் திறப்பு..!!

1,00,00,000 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியம் திறப்பு..!!

Update: 2022-06-06 16:20 GMT

மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள இந்த அருங்காட்சியகம் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைக் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.4.2022 அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள  ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம்;  அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன; இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி,  நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும்” என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக “அனைத்தும் சாத்தியம்” என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த அருங்காட்சியகம், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும்,  பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த அருங்காட்சியகம் வழிவகை செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய “மாதிரி இல்லம்” வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

Similar News