பெண் முகத்தில் 118 தையல்.. பாலியல் சீண்டல் கும்பலின் கொடூர செயல் !
பெண் முகத்தில் 118 தையல்.. பாலியல் சீண்டல் கும்பலின் கொடூர செயல் !
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள டிடி நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவருடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த பெண்ணின் கணவர் கடைக்குள் சென்று பொருள்களை வாங்கிய நிலையில், அப்பெண் வெளியே தனியாக நின்றுள்ளார்.
அப்போது மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணின் அருகே வந்து ஆபாசமான வார்த்தைகள் பேசியும், விசிலடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் இளைஞர் ஒருவரை ஆத்திரத்தில் அறைந்துள்ளார். மேலும் தனது எதிர்ப்பையும் காட்டினார்.
இதனால் கோபமடைந்த அக்கும்பல் திடீரென பெண் மீது தாக்குதல் நடத்தினர். மூவரும் பேப்பர் கட்டர் வைத்து அந்த பெண்ணின் முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நிலைமை உணர்ந்து பெண்ணின் கணவரும், பொதுமக்களும் அங்கே வர குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு முகத்தில் 118 தையல்கள் போட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹோட்டல் சிசிடிவி உதவியோடு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். அதன்படி மூவரில் இருவரை கைது செய்துள்ளது. மூன்றாம் நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு பெண்ணின் துணிச்சலைப் பாராட்டியும் உள்ளார். மேலும் தாக்குதல் நடத்திய மூன்று பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தம்பதியிடம் அவர் உறுதி அளித்தார்.
newstm.in