11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்- போக்சோவில் மாணவர் கைது.. நடந்தது என்ன?
11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம்- போக்சோவில் மாணவர் கைது.. நடந்தது என்ன?
சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான 11 ஆம் வகுப்பு மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். வீட்டில் தனியாக இருந்தப்போது, மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் பெரும் வேதனையில் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவி எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது போன்று எழுதி வைத்து இருந்தார். மேலும் டீச்சர், ரிலேஷன்ஸ் நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும் என உருகமாக எழுதியுள்ளார். மேலும் தற்கொலைக்கான காரணம் பாலியல் அத்து மீறல் என்றும் தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பது குறித்து குறிப்பிடாமல் வைத்திருந்தார்.
மேலும் மாணவி எழுதிவிட்டு கிழித்து எறிந்த மற்றொரு கடிதமும் போலீசார் கையில் சிக்கியது. அதில் கிடைத்த தகவலின்பேரில், தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அந்த மாணவியின் நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோரிடம் தீவிரமாக விசாரித்தனர். அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தப்போது, மாணவிக்கு அதிகளவில் கால் செய்த பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4 பேரை பிடித்து விடிய விடிய விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21), என்பவர் அதிகமாக அந்த மாணவிக்கு செல்போனில் ஆபாச தகவல்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷிடம் விசாரணை செய்தனர். விக்னேஷ் குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஈ.சி.ஈ மூன்றாமாண்டு படித்து வருகிறார். அந்த மாணவியை விக்னேஷ் காதலித்து வந்ததாகவும் தற்போது விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாணவி விக்னேஷிடம் பேச்சை குறைத்துக்கொண்ட நிலையில், மாணவிக்கு ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி உள்ளார். மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் செல்போனில் இருந்த தகவல்களின் அடிப்படையில் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்தில் அந்த மாணவியின் செல்போனை மேலும் தீவிரமாக போலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
newstm.in