பார்ட்டிக்கு சென்ற 11-ம் வகுப்பு மாணவன்.. அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சக மாணவன்..!

பார்ட்டிக்கு சென்ற 11-ம் வகுப்பு மாணவன்.. அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சக மாணவன்..!

Update: 2022-05-16 10:56 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கீரனூர் பகுதியைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் கோகுல் (17). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் (14-ம் தேதி) இரவு இவருடைய வீட்டிற்குச் சென்ற சக மாணவர் ஒருவர், ‘பிறந்தநாள் பார்ட்டி’ எனக் கூறி கோகுலை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நள்ளிரவு வரை கோகுல் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று (15-ம் தேதி) அதிகாலை, டி.கீரனூர் புறவழிச்சாலை அருகே ஒருவர் கழுத்து, கை பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

அவரை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளும், அருகிலேயே கிடந்துள்ளது. அந்த நபர் யார் என விசாரித்ததில், பள்ளி மாணவர் கோகுல் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார், மாணவனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் பேரில் சக மாணவரான கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் மகன் அருண் ஆகாஷை என்பவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது, “என்னைப் பற்றியும், எனது குடும்பத்தினர் பற்றியும் கோகுல் அவ்வப்போது மிகவும் இழிவாகப் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த நான் கோகுலை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தேன்” என்று அருண் ஆகாஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News