வீடு வீடாக சென்று பாடம் நடத்தும் 12 வயது சிறுமி... குவியும் வாழ்த்துகள்!
வீடு வீடாக சென்று பாடம் நடத்தும் 12 வயது சிறுமி... குவியும் வாழ்த்துகள்!
எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடா எனும் ஊரை சேர்ந்தவர் 12 வயதாகும் சிறுமி ரீம் எல் கவ்லி. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஆசிரியாராய் மாறிய ரீம், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். ரீம் எல் கவ்லியின் இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து ரீம் கூறுகையில், “தெருக்களில் விளையாடுவதற்கு பதில், பாடம் கற்றுத்தந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி, காலையில் எழுத்து பிரார்த்தனை செய்த பின், அவர்களுக்கு வகுப்பு எடுக்க துவங்குகிறேன். அரபு, கணக்கு, ஆங்கிலப் பாடங்களை அவர்களுக்கு கற்பிக்கிறேன்” என்று கூறினார்.
முதலில், நோட்புக் மூலம் பாடம் எடுக்க துவங்கிய சிறுமி ரீம், பின் கரும்பலகையில் எடுத்திருக்கிறார். இவரது சேவை குறித்து கேள்விப்பட்ட உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று, தற்போது அவருக்கு ஒரு வெள்ளை போர்டையும், மார்க்கர்களையும் வழங்கியிருக்கிறது. ரீம் தனது மாணவர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
அவரிடம் படிக்கும் 9 வயதான முகமது அப்தெல் மோனீம் என்பவர் கூறுகையில், “பள்ளிகள் மூடப்பட்டதும், பள்ளியில் நாங்கள் கற்றுக்கொண்டதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ரீம் எங்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினார். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். எளிமையாக புரியும் வகையில் அவர் நடத்தும் அரபு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் நான் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.
ரீம்மின் இந்த சேவை உலகில் உள்ள பிரபல ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகி அவரை பிரபலம் ஆக்கி உள்ளது. சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த செய்திகள் பரவ, நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தக்களை தெரிவித்து வருகின்றனர்.