இன்று 13 புதிய மாவட்டங்கள் உதயம்..!!
இன்று 13 புதிய மாவட்டங்கள் உதயம்..!!
ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். இதையடுத்து ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தெலுங்கு வருட பிறப்பு நாளில் மாவட்டங்கள் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்று முதல் 26 மாவட்டங்களாக உதயமாகிறது. புதியதாக உதயமாக உள்ள மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தினம் ஒரு முக்கியமான நாள் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
“மாவட்ட இணையதளங்கள் மற்றும் கையேடுகளை முதல் மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த முக்கியமான நாளில் மக்கள் ஈடுபடுவதை சாத்தியமாக்கும் வகையில், மாவட்ட இணையதளங்களை முதல் மந்திரி தொடங்க உள்ளார்.ஏப்ரல் 6-ம் தேதி, அனைத்து கிராமங்களிலும் அயராது உழைத்த தன்னார்வலர்களை முதல்வர் பாராட்ட உள்ளார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு ஏப்ரல் 8-ம் தேதி ‘வசதி தீவனம்’ வழங்குகிறார்.
சீரான மாவட்ட மறுசீரமைப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ் நான்கு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக மாற்றுவது தொடர்பான இறுதி அறிவிப்பு, அடுத்த சில நாட்களில் வெளியாகும்.” என்று தெரிவித்துள்ளது.