3 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மீனவ கிராமத்தில் பரபரப்பு..!
3 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மீனவ கிராமத்தில் பரபரப்பு..!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு நேற்று நள்ளிரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தைகள் உட்பட 14 பேரையும் ஒரே நேரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து காரைக்கால் மேடு மீனவர் கிராமத்திற்கு நேரில் சென்ற மருத்துவக் குழுவினர், அங்கு இருந்த குடிநீர் மற்றும் உணவு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, மீனவ கிராமத்தின் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கிராமம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.