இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு..!
இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு..!
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மலாலியில் பழமையான ஜும்மா மசூதி உள்ளது. இங்கு, சமீபத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டபோது இந்து கோவில் போன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால், முஸ்லிம்கள் வசம் இருக்கும் இந்து கோயிலை மீட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மசூதியை சீரமைக்க தடை விதிக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மசூதிக்கு அருகில் உள்ள ராமாஞ்சநேயா பஜனை மந்திராவில் நேற்று முன்தினம் கோபால கிருஷ்ண பணிக்கர் தலைமையில் ‘தாம்பூல பூஜை' நடத்தினர். இதனால் இந்து, முஸ்லிம் தரப்பினரிடையே பதற்றம் எழுந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் மசூதியை பார்வையிட்டார். மசூதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் கூட தடை விதித்து, இன்று (27-ம் தேதி) இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தக்ஷின கன்னட மாவட்ட ஆட்சியர் கே.வி.ராஜேந்திரா, “சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே இது குறித்து முடிவெடுக்க முடியும்” என்றார்.