1.92 கோடி ரூபாய் லஞ்சம்... தங்கத்தில் கழிவறை… சிக்கினார் போலீஸ் அதிகாரி..!
1.92 கோடி ரூபாய் லஞ்சம்... தங்கத்தில் கழிவறை… சிக்கினார் போலீஸ் அதிகாரி..!
ரஷ்யாவின் ஸ்ட்ராவ் போல் மாகாணத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அலெக்சாய் சஃபோனோவ். இவர், தனக்கு கீழ் பணிபுரியும் 35 அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு மாபியா கும்பலை வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவருடைய வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவரது வீட்டில் தங்கத்தினால் ஆன சரவிளக்குகள், தங்க முலாம் பூசிய கதவுகள், படிக்கட்டுகள், தங்கமுலாம் பூசப்பட்ட நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. பின்னர் அந்த வீட்டில் இருந்த கழிவறையை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த கோப்பைகளும் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது.
தங்கத்தினால் ஆன பொருட்கள் மட்டுமின்றி, வீட்டினுள் அழகான புல்வெளியும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விலை உயர்ந்த ஆடம்பர கார்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வீட்டையே சொர்க்கபுரியாக மாற்றி வைத்துள்ளார் அலெக்சாய் சஃபோனோவ். இதைக்கண்ட போலீஸ் அதிகாரிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், விசாரணை நடத்திய போலீசார், அந்த வீட்டில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூபில் வெளியிட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்; 3.45 லட்சம் பேர் அந்த வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அலெக்சாய் சஃபோனோவும் அவரது கீழ் உள்ள அதிகாரிகளும், வர்த்தகத்துக்கான வாகனங்களுக்கு போலியான அனுமதி தருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சுமார் 1.92 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘அலெக்சாய் சஃபோனோவ் தனக்கு கிடைத்த ஊழல் பணத்தில் தன்னுடைய வீட்டை தங்கத்தால் செதுக்கியுள்ளார்; அவர் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதியானால், 8 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்’ என்று, ‘தி மாஸ்கோ டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.