2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... 6 மைனர் சிறுவர்கள் கைது !!
2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... 6 மைனர் சிறுவர்கள் கைது !!
6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வரும் 6 மாணவர்கள் சேர்ந்து 2 சிறுமிகளை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொரோனா எனும் பெருந்தொற்று இப்போது குறைந்து வருகிறது. இதன்காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட கால விடுமுறைக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்றதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்கிகொடுத்தனர். இதனால் தற்போது அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் மாணவர்கள் கல்வி கற்க உதவியாக இருந்தாலும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படியோரு சம்பவம் நடந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் சேக்புரா மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் 2 சிறுமிகளை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பீகாரின் பார்பிஹா போலீசார் கூறுகையில், கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்தே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் அரசுப் பள்ளியில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களில் 3 பேர் 6ஆம் வகுப்பும், மற்ற மாணவர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாணவர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் ஒரு சிறுவன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஆவார்.
குற்றச்சம்பவம் நடந்தபிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களே அந்த மாணவனை பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆபாசப் படம் பார்த்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, குற்றச்செயலில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது நிலத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவர்கள் இந்த சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுமிகளின் கையில் அவர்கள் பணத்தையும் கொடுத்து, வெளியில் இதுதொடர்பாக யாரிடமும் வாய் திறக்க கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். தற்போது போலீசாரிடம் சிக்கி சிறையில் அடைப்பட்டுள்ளனர்.
newstm.in