தேர்தல் முடிந்த ஒரே மாதத்தில் 2 எம்எல்ஏக்கள் கொரோனாவுக்கு பலி !!
தேர்தல் முடிந்த ஒரே மாதத்தில் 2 எம்எல்ஏக்கள் கொரோனாவுக்கு பலி !!
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பாஜகவின் கூட்டணியில் உள்ள யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) கட்சி சார்பில் கடந்த தேர்தலில் லெஹோ ராம் போரோ என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் லெஹோ ராம் போரோவுக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரங்கல் தெரிவித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தமுல்பூர் எம்.எல்.ஏ லெஹோ ராம் போரோவின் அகால மறைவுக்கு நான் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். அவரின் மரணம் மாநிலத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் இரண்டாவது எம் எல் ஏ இவராவார். ஏற்கனவே, கடந்தவாரம் எம்எல்ஏ மஜேந்திர நர்ஸாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் தமிழகத்துடன் மே 2 ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஒருமாதத்திற்குள் இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்திருப்பதால் அரசியல் கட்சியினரும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
newstm.in