2 மாத குழந்தை கழுத்தில் கத்திவைத்து 33 சவரன் நகை கொள்ளை.. நாகையில் பயங்கரம் !!
2 மாத குழந்தை கழுத்தில் கத்திவைத்து 33 சவரன் நகை கொள்ளை.. நாகையில் பயங்கரம் !!
பிறந்து இரண்டு மாதங்கள் ஆன குழந்தையை கொன்றுவிடுவதாக கூறி நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் பன்னீர் செல்வம்(80), திலகவதி(58) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மதுபாலா(28), பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் மதுபாலா இங்கேயே தங்கி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தப்போது, நள்ளிரவில் கதவை உடைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் 4 மர்ம பேர் உள்ளே புகுந்தனர். முகமூடியுடன் இருந்த அவர்களை பார்த்து பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மதுபாலாவின் கைக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தையும் கொடுங்கள். இல்லையெனில் குழந்தையை கொன்று விடுவோம், என்று மிரட்டினர்.
பின்னர், முகமூடி கொள்ளையர்கள், வீட்டின் பீரோவில் இருந்த 33 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர். முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் பன்னீர்செல்வம் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் பன்னீர்செல்வம் வீட்டுக்கு முகமூடி கொள்ளையர்கள் வந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரோகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
வீடு புகுந்து கைக்குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி 33 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள், கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘newstm.in