மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற பகுதியில் பந்து மதுரியா- மம்தா தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் குழந்தை வேண்டிப் பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர். இதையடுத்து இவர்களது உறவினர் நீரஜ் என்பவர் இந்த தம்பதியைப் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு சிறு பூஜைகள் செய்த அந்த சாமியார், ஒரு கட்டத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என தம்பதியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு திரும்பினர்.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி குவாலியரில் உயிரிழந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். இது குறித்து விசாரணை செய்தபோது, கொல்லப்பட்டு கிடந்தது பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணை நீரஜ் அழைத்துச் சென்று கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அவரது சடலத்தைச் சடங்கு செய்வதற்காகச் சாமியாரிடம் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன நீரஜ் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதேபோல் இவர் மற்றொரு பாலியல் தொழிலாளியையும் நரபலிக்காக கொலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

இதிலும், ஒரே வாரத்தில் இரு பெண்களை நீரஜ் கொலை செய்ததை அறிந்த போலீசார் உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தினர் அதன்பின்னணில் தான் சாமியார் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பந்து மதுரியா- மம்தா தம்பதி, மம்தாவின் சகோதரி மீரா, மீராவின் நண்பர் நீரஜ், சாமியார் யாதவ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags: