2021-22 ம் ஆண்டு மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் !
2021-22 ம் ஆண்டு மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் !
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
2021- 2022 -க் கான மத்திய நிதிநிலை அறிக்கை, காகிதமற்ற முறையில் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையின் ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் நிதி நிலை அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் நிதிநிலை அறிக்கையின் ஆவணங்கள் குறித்த தகவல்களை எளிய முறையில் பெறுவதற்காக மத்திய நிதிநிலை அறிக்கை கைப்பேசி செயலி (Union Budget Mobile App) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தி உள்ளார். இதில், வருடாந்திர நிதி நிலை அறிக்கை, நிதி மசோதா உள்ளிட்ட 14 ஆவணங்களை இந்த செல்பேசி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் தளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலியில் ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும், தேடவும், அச்சிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி தேசிய தகவலியல் மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற மத்திய நிதிநிலை அறிக்கை இணையதளத்தின் வாயிலாகவும், பதிவிறக்கம் செய்யமுடியும்.
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரின் உரை நிறைவடைந்த பின்னர் பட்ஜெட் ஆவணங்களை கைப்பேசி செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.