#BREAKING:- 23 தீர்மானங்களும் நிராகரிப்பு.. ஒற்றை தலைமையுடன் அடுத்த பொதுக்குழு..!

#BREAKING:- 23 தீர்மானங்களும் நிராகரிப்பு.. ஒற்றை தலைமையுடன் அடுத்த பொதுக்குழு..!

Update: 2022-06-23 12:45 GMT

ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று (23-ம் தேதி) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் அமர்ந்தனர். இந்த இருவரின் இடையே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார்.


அரங்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ‘ஒற்றை தலைமை வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். மேலும், ‘ஓபிஎஸ் ஒழிக’ என்றும் கோஷம் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பேசத் தொடங்கும் போது, ‘அவர் பேசக்கூடாது’ என சில உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இதன் பின்னர், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொன்னையன் வழி மொழிவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கிட்ட முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம், ‘அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “பொதுக்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டனர். அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, ஒற்றை தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழு எப்போது கூடுகிறதோ அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் ஆரவாரமாக குரல் எழுப்பினர்.

Similar News