2.50 லட்சம் வாழை மரங்கள் சேதம்.. பெரும் துயரத்தில் விவசாயிகள் !!
2.50 லட்சம் வாழை மரங்கள் சேதம்.. பெரும் துயரத்தில் விவசாயிகள் !!
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் வெப்பத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 26ஆம் தேதி இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
ஆனால், கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் மழையுடன் சூறைக் காற்றும் வீசியது. இதில், ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வி.காட்டுப்பாளையம், எம்.புதூர், வெள்ளக்கரை, பத்திரக்கோட்டை, சாத்தங்குப்பம், ஓதியடிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஓரிரு மாதத்துக்குள் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2.50 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து விவசாயிகள் மீண்டுவந்து, மீண்டும் சாகுபடி செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.
அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், வாழையை காப்பீடு செய்வதில் விவசாயிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வாழை மரங்களை கழியால் கட்டியிருந்து, அதன் பின்னர் பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பு ஏற்பட்டால் சாகுபடி செலவு முழுவதையும் வழங்க அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
newstm.in