தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மீனா. இவர், தனது மகன் திலக் என்பவருக்கு ஆப்பிள் ஐ போன் வாங்குவதற்கு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான பூர்விகாவுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, 22 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் 5s என்ற செல்போனை வாங்கியுள்ளார். அந்த செல்போனுக்கு ஒரு வருடம் வாரண்டி இருப்பதாக கூறி விற்றுள்ளனர் செல்போன் விற்பனை நிறுவனத்தினர்.

ஆனால், ஆப்பிள் ஐ போன் வாங்கிச் சென்ற ஐந்து மாதத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சென்று முறையிட்டுள்ளார் மீனா.

செல்போனை பெற்றுக்கொண்ட நிறுவனத்தினர் ஒரு வார காலத்தில் பழுது நீக்கி தருவதாக கூறியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின்னர், செல்போனில் தண்ணீர் உள்ளது. அதன் காரணமாக வாரண்டியில் பழுது நீக்கி தர முடியாது எனக் கூறியுள்ளனர்.

தண்ணீரில் விழாத செல்போனுக்கு உள்ளே எப்படி தண்ணீர் இருக்கும்..? ஆன் ஆகவில்லை என்று தான் உங்களிடம் கொடுத்துள்ளேன்” என செல்போன் விற்பனை நிறுவனத்திடம் மீனா கூறிய போதும் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மீனா, தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தினர், புதிய ஆப்பிள் ஐ போன் 5s செல்போன் வழங்க வேண்டும் அல்லது அதற்கான தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வர்த்தக சேவைக்காக 50 ஆயிரம் இழப்பீடு, முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 2 லட்சம் அபராதமும், இந்த தொகையை உத்தரவு நகல் பெற்ற ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

தவறும் பட்சத்தில், மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவு தொகையாக 8 ஆயிரமும் கட்ட வேண்டும்.

இந்த தொகை மொத்தமும் பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனம், பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனத்தின் தேனி கிளை மற்றும் ஆப்பிள் இந்தியா பிரைவேட் நிறுவனமும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.