17ம் தேதி 3 மாவட்டங்கள்.. 18ம் தேதி 5 மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
17ம் தேதி 3 மாவட்டங்கள்.. 18ம் தேதி 5 மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நாளையும், 5 மாவட்டங்களில் நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (17ம் தேதி) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (18ம் தேதி) தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19 மற்றும் 20ம் தேதி தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; காலையில் பனி மூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவலோகம் பகுதியில் 5 செ.மீ மழையும், இரணியல், களியல், தக்கலையில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.