பள்ளிவாசலில் மாயமான 3 வயது குழந்தை திருச்செந்தூரில் மீட்பு..!

பள்ளிவாசலில் மாயமான 3 வயது குழந்தை திருச்செந்தூரில் மீட்பு..!

Update: 2022-07-14 05:20 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் செவல்விளை 6-வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (36). இவருக்கு நாகூர் மீராள் (26) என்ற மனைவியும், முகமது சபிக் (7) என்ற மகனும், நஜிலா பாத்திமா (3) என்ற மகளும் உள்ளனர்.

சாகுல்ஹமீது தனக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றார். மொட்டை போட்டு விட்டு இரவு அங்கேயே குடும்பத்தினருடன் தங்கினார்.

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நாகூர் மீராள் எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்து தூங்கிய குழந்தை நஜிலா பாத்திமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும், குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இதுகுறித்து கூடங்குளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், குழந்தையை ஒருவர் காரில் கடத்திச் சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை, திருச்செந்தூர் - குலசேகரப்பட்டினம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் கரம்பவிளை விலக்கு பகுதியில் 2 கார்களுக்கு இடையில் ஒரு குழந்தை நீண்ட நேரமாக இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை நஜிலா பாத்திமா என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவில் போலீசார் குழந்தையை திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூடங்குளம் போலீசார் குழந்தையின் பெற்றோருடன் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து குழந்தையை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு குழந்தை மற்றும் பெற்றோரை கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் தலைமையிலான போலீசார் திருச்செந்தூரில் இருந்து அழைத்து சென்றனர். மேலும் குழந்தையை கடத்திய கும்பலை கூடங்குளம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News