ரயில்வே தேர்வில் முறைகேடு.. ரயில் பெட்டிக்கு தீ வைப்பு.. 4 பேர் கைது..!

ரயில்வே தேர்வில் முறைகேடு.. ரயில் பெட்டிக்கு தீ வைப்பு.. 4 பேர் கைது..!

Update: 2022-01-26 20:25 GMT

ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

ரயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறியதாவது: “தற்போது சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ரயிலுக்கு தீ வைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளோம்.

அரசு பொருட்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம். தேர்வு குறித்து விசாரிக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பீகார் மாநிலம் முழுவதும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெகனாபாத் நகரில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் தீ வைத்து எரித்தனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில்வே என்டிபிசி தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது கட்ட தேர்வு என்பது ஏமாற்று வேலை எனக் குற்றம் சாட்டியுள்ள தேர்வர்கள், 2019-ம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வு எனக் குறிப்பிடவில்லை எனவும், தங்களின் எதிர்காலத்தோடு அரசு விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த ரயில்வே தேர்வு வாரியம், தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வுக்கு என்பது முறைப்படி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, போராட்டம் காரணமாக தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Similar News