சேமிப்பு என்ற பெயரில் 4 கோடி ரூபாய்.. ஆட்டயப் போட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்..!
சேமிப்பு என்ற பெயரில் 4 கோடி ரூபாய்.. ஆட்டயப் போட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்..!
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பழனிக்குமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில், தொட்டியம் மணமேடு கொடியம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த வெள்ளையம்மாள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “தொட்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அலகரை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
என்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் சேமிப்பு என்ற பெயரில் சுமார் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். நாங்கள் பணத்தை திருப்பி கேட்டபோது, திரும்பி தர மறுத்து விட்டார்.
இதுகுறித்து திருச்சி கலெக்டர், முசிறி ஆர்டிஓ, மாவட்ட போலீஸ் எஸ்பி, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொட்டியம் இன்ஸ்பெக்டருக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து புகார் அளித்தோம். முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் கருப்பையா மீது தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கருப்பையாவை கைது செய்து, ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டும். கருப்பையா, அவரது வாரிசுகள் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.