4 நாட்கள் தடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் !!
4 நாட்கள் தடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் !!
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. அதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி தடுப்பூசி திருவிழா தொடங்கியது.
இதுபற்றி பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில், நாம் இன்று தேசிய அளவில் டிகா உத்சவ்வை (தடுப்பூசி திருவிழா) தொடங்க இருக்கிறோம். இந்த நான்கு நாட்களும் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
‘நாட்டு மக்கள் 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள், கொரோனா சிகிச்சையில் உள்ள மக்களுக்கு உதவுங்கள், முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
மேலும், யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதியில் மைக்ரோ-கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்க வேண்டும்’ என பிரதமர் கூறி உள்ளார்.
newstm.in