234 தொகுதிகளுக்கு 4,100 வேட்பாளர்கள் போட்டி.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல் !!

234 தொகுதிகளுக்கு 4,100 வேட்பாளர்கள் போட்டி.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல் !!

Update: 2021-03-23 07:42 GMT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு முடிந்து தற்போது சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வேட்புமனுக்கள் மீது கடந்த 20ஆம் தேதி பரிசீலனை நடைபெற்றது. இதில் 2,738 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,509 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வேட்பு மனுக்களை 21 மற்றும் 22ஆம் தேதி மாலை 3 மணி வாபஸ் பெற தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை 3 மணி வரை சுமார் 250க்கும் மேற்பட்டோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாற்று வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.  இதையடுத்து, 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை 3 மணிக்கு மேல் வெளியிட்டனர். அதன்படி 234 தொகுதிகளில் 4,100 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மேலும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு நேற்று மாலையே தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.    

தமிழகத்தில் நேற்று மாலையுடன், வேட்புமனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட நடைமுறைகள் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 4,100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில், திமுக, அதிமுக, மநீம,  அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. எனினும் அதிமுக -திமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

newstm.in

 
 

Tags:    

Similar News