எக்ஸ்பிரஸ் ரயிலில் 46 கிலோ கஞ்சா.. கணவன் - மனைவி உட்பட 3 பேர் கைது..!
எக்ஸ்பிரஸ் ரயிலில் 46 கிலோ கஞ்சா.. கணவன் - மனைவி உட்பட 3 பேர் கைது..!
மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அதிகாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது ஒரு பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பையை கொண்டுவந்த ஒரு பெண் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் ரயிலில் இருந்து இறக்கி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி தாராநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் சிவசங்கர் (25) அவரது மனைவி சத்யா (20), இவர்களது உறவினர் தியாகராஜன் மகன் சரபேஸ்வரர்(19) என்பதும், அவர்கள் 3 பேரும் திருச்சியில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு கடலூர் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் எடுத்து சென்ற 5 பைகளில் 23 பாக்கெட்டுகளில் இருந்த 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.