ஓடும் ரயிலில் பயணிகளிடம் அத்துமீறல்.. 3 போலீசார் உட்பட 5 பேர் கைது !!
ஓடும் ரயிலில் பயணிகளிடம் அத்துமீறல்.. 3 போலீசார் உட்பட 5 பேர் கைது !!
சென்னை- தூத்துக்குடி இடையே இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதில் பயணித்த 5 பேர் ரகளை செய்யத் தொடங்கினர். அதாவது, மது போதையில் இருந்த 5 பேரும், சக பயணிகளை கேலி கிண்டல் செய்தும், ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.
சக பயணிகள் அமைதியாக இருக்ககூறியப்போது அவர்களிடம் 5 பேரும் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த பயணி ஒருவர் விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், ரயில் விழுப்புரம் வந்து சேர்ந்தபோது அங்கு எந்த போலீஸாரும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து பயணிகள் விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ரயில் இரவு 11 மணிக்கு விருத்தாசலம் சந்திப்பை வந்தடைந்த நிலையில், விருத்தாசலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான போலீசார், குறிப்பட்ட எஸ் 3 பெட்டியில் ஏறி விசாரணை நடத்தினர். அப்போது 5 பேர் மீதும் பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பின்னர் மது போதையில் இருந்த 5 நபர்களை போலீசார் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணிக்கராஜ், செந்தில்குமார், முருகன் ஆகியோர் சென்னை காவல் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் என்பதும் உடனிருந்த பொன்னுசாமி மற்றும் முத்துக்குமார் அவர்களது உறவினர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரயில்வே போலீசார், மருத்துவப் பரிசோதனை செய்ததில் 5 பேரும் மது அருந்தியிருந்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த கைது செய்தனர். பின்னர் அவர்களை பிணையில் விடுவித்தனர்.
newstm.in