இன்று முதல் 5 நாள்.. இந்த மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அறிவிப்பு..!
இன்று முதல் 5 நாள்.. இந்த மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில், இன்று (3-ம் தேதி) முதல் 5 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் (3-ம் தேதி), நாளையும் (4-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 5ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்கிழக்கு கடலோர பகுதிக்கும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கும், வரும் 7-ம் தேதி தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.