டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்!!
டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்!!
தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சையில் சாரலும், திடீரென மிதமான மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. தொடர் மழையால் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
இதேப்போல் பாபநாசம், வல்லம், பூதலூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே அறுவடையான நெல் மூட்டைகள் அந்தந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் 1500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து உள்ளன.
திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சம்பா அறுவடை பணிகள் முடங்கியது. மழை ஓய்ந்தால் மட்டுமே தண்ணீர் வடியும் என்ற நிலை உள்ளது. மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
newstm.in