2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர்.. அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்..!

2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர்.. அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்..!

Update: 2022-07-12 04:45 GMT

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால், உள்நாட்டு குழப்பம் உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று (10-ம் தேதி) இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரிலிருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (41), அவரது மனைவி அனுஷா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் ரூ.4 லட்சம் கொடுத்து ஒரு படகில் ராமேஸ்வரம் நோக்கி வந்தனர்.

அந்த படகு, தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு இலங்கைக்கு சென்று விட்டது. நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை, அந்த வழியாக சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு, கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் 6 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Similar News