பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

Update: 2022-06-14 15:50 GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முதுநிலை அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதில், மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும். அதன்படி, 10 சதவீத இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி பயோ டெக் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற முறையை மாற்றி தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்” என்று, மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைத்து பல்கலைக் கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதல்வர் உறுதியாக உள்ளார். குறிப்பாக, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இது குறித்து பேசியுள்ளோம்.

எனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

மேலும், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைப் போல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்து பாடங்களும் முழுமையாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Similar News