வீடுகளின் விலை 7% அதிகரிப்பு.. ஆய்வில் வெளியானது அதிர்ச்சி தகவல்..!
வீடுகளின் விலை 7% அதிகரிப்பு.. ஆய்வில் வெளியானது அதிர்ச்சி தகவல்..!
சென்னை உட்பட இந்தியாவின் முக்கியமான 8 நகரங்களில், வீடுகளின் விலை 3 முதல் 7 சதவீதம் வரை அதிகரித்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ப்ராப் டைகர்.காம் சொத்து தரகு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கட்டுமானத்துக்கு மிக முக்கிய மூலப் பொருட்களாக விளங்கும் சிமெண்ட், உருக்கு கம்பிகள் உள்ளிட்டவற்றின் விலை கடந்த ஆண்டில் கணிசமாக உயர்ந்தது.
இதன் காரணமாக, தலைநகர் டில்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மகாராஷ்டிரா, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 8 நகரங்களில் வீடுகளின் விலை 3 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேபோன்று, கடந்த 2020-ம் ஆண்டில் 1,82,639 ஆக இருந்த வீடுகளின் விற்பனை, 2021-ல் 2,05,936-ஆக அதிகரித்தது. இது, 13 சதவீத வளர்ச்சியாகும். மேலும், கடந்த ஆண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் 1.22 லட்சத்தில் இருந்து 75 சதவீதம் அதிகரித்து 2.14 லட்சமாக உயர்ந்தது.
மத்திய அரசின் ஆதரவான கொள்கைகள் மற்றும் ரிசர்வ் வங்கி குறைந்த வட்டி விகிதத்தை பராமரித்து வருவது போன்றவை சாதகமான அம்சங்களாக உள்ளதால், நடப்பு (2022) ஆண்டில் வீடுகள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும்’ என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.